Wednesday, May 6, 2015

உயிர் தேடும் கூடு - 01



கடை விழியில் நீரோட
நுனி விரலில் பயம் ஆட
சுவாசம் தொலைத்தவளாய்
மூச்சுத் திணறுகிறாள்

தொலை தூரப் பயணத்தை
திட்டமிடாமலே நடந்து கொண்டிருந்தது
கால்கள்

கற்பனை ஓவியங்களை
காலங்கள் கலைத்தது
கண்ணீர் ஓவியத்தை
காற்று கலைத்தது

எதிர் காலக் கனவுகளில்
நிகழ்காலம் தொலைத்தவள்
இவள்

தனக்குள்ளே அவள்
கனவுகள் புதைத்தது
காலம்

காலையில் உதித்த
நிலா அவள்(ஒளியற்ற தன்மை)
பிறந்தவுடன் தாயிழக்கும்
துரதிஸ்டம்

குயிலின் கறுப்பு
குறுகிய பேச்சு

முத்து சிரிப்பு
முழிக்கும் பார்வை

கொடியின் இடை
கொஞ்சம் எடை

ஐந்தடி உயரம்
ஓரடி முடி

உழைக்கும் கைகள்
உடல் நிறைந்த காயங்கள்

ஓரிரு ஆடைகள்
ஒரு வேளை கஞ்சி

சொல்லச் சொல்ல
சொல்லிக்கொண்டே போகலாம்

அவளைப் பிரதியெடுத்து வைத்திருந்தது
அவள் கிராமமும்

சூரியனின் ஆட்சியில்
ஒளிந்து கொண்ட புற்களும்
வறண்டு போன மண்ணும்
பரவிய கிராமம் அது

ஓரிரு நிழல் மரங்கள்
நிழலிழந்து நிழல் தேடிது

பஞ்சாயத்து ஆல மரமும்
களைப்பேறி படுத்துக் கொண்டது

இருந்த பனை மரங்களும்
வீட்டுக் கூரைகளில்
ஒளிந்து கொண்டன

செவ்வாயாய் மாறும் முயற்சியில்
பாதி வெற்றி கண்டது
அந்தக் கிராமம்

அங்குதான் அவள்
ஓலைக்குடிசையும்
ஒதுங்கிக் கிடந்தது

அவள் மனதில் என்றும்
ஆறாத தளும்புகள் பதித்து
கைகோர்த்து
துள்ளி விளையாடியது
கவலைகளும்
வறுமைகளும்

நிதானம் இழந்த மனதில்
திடமான நம்பிக்கை மட்டும் நிலவியது

ஊர் பண்ணையாரின் வீட்டில்
வேலைக்காரி
சலவை நிலையத்தில்
தொழிலாழி
கடற்கரை மணலில்
வியாபாரி
அவள் வீட்டில் அவள்
தையல்காரி

ஒரு நாளில் ஆயிரம்
அவதாரங்கள் எடுக்க
இவளாலும் முடியும்

வெறுங்கால்கள் மண்ணில்
புதைந்தாலும்
வேகமாய் ஓடி
வேலைகள் முடிப்பவள்

அவளுக்கு எப்போதும்
வேலைகள் அதிகமாகிறதே அன்றி
கூலி அதிகமாவதில்லை

மண்ணுடன் போட்டியிட்டு
வரண்டு போன உதடிகளில்
தண்ணீர் மட்டுமே
எப்போதும் நிறையும்
உணவு சில வேளையில் தான்

ஓயாமல் உழைத்து
வீடு திரும்புகையில்
வானமும் அவளைப்போல
கரி அள்ளி பூசியிருக்கும்

ஒற்றையடிப்பாதையில்
பூமி போல்
சுழலத்தொடங்கிவிடும்
அவள் கண்கள்

உயிர் நடுங்க
உடல் வியர்க்க
நடக்கும் ஊர்வலம்
நடத்தும் கால்கள்
ரசிக்கும் நிலா

வீட்டுக்குள் நுளைந்ததும்
வீட்டில் பதுங்கிய
இருள் விரட்ட
அடுப்பங்கரையில்
கை தடவி
விளக்கேற்றுவாள்

அது மங்கியும் மங்காமலும்
அது பாட்டிற்கு மின்னும்

குளிர் ஊறிய களிமண் தரையில்
களைப்பாற அமர்ந்து கொள்வாள்

ஓலைக் கூரையில்
ஒழிந்து கொண்ட நுளம்புகள்
காதோரம் கேலி செய்ய
முந்தானைச்சீலையால்
மூடிக்கொள்வாள்

அவள் மூடிய சேலைக்குள்
முட்டக் கண்ணீர் வடிக்கும் கண்கள்

இவ்வாறே கழித்து விட்டாள்
அவள் தன் வாழ்வின்
இருபத்தைந்து வருடங்களை


                                                                                                                  தொடரும். . . . . . . . . . . . . 

No comments:

Post a Comment